Sunday, November 24, 2013

சச்சினை விட பாரத ரத்னாவுக்கு ஏற்றவர் விஷி ஆனந்த் - ஏன்? எனது Deccan Chronicle கட்டுரை

இது குறித்து நான் டெக்கான் குரோனிகள் நாளிதழில் எழுதியது இதோ.

It's high time Anand awarded the Bharat Ratna - கட்டுரையின் உரல்


Sunday, November 17, 2013

பாரத ரத்னா சச்சின் - விஷி ஆனந்த் சாதனையாளர் இல்லையா?

பாரத ரத்னா சச்சின் - விஷி ஆனந்த் சாதனையாளர் இல்லையா? - இட்லிவடையில் பதிப்பிக்கப்பட்டது
 
சச்சின் ஓய்வு பெற்ற நாளே, 40 வயதிலேயே, அவரது கிரிக்கெட் சாதனைக்காக, இந்திய அரசு அவருக்கு நாட்டின் மிக உயரிய சிவில் விருதான பாரத ரத்னாவை வழங்கி கௌரவித்துள்ளது. இது சரி தான், இல்லை, நாட்டுக்காக அவர் ஆற்றிய தொண்டு என்ன, நாட்டுக்கு நல்வகையில் பங்களிக்காத அந்த கிரிக்கெட் சாதனைக்கு பாரத ரத்னாவா என்று கேட்டு, இது சரியில்லை என்று இரு தரப்பு வாதங்களை பார்க்க முடிகிறது. ஒப்புக்குச் சப்பாணியாக, அவருக்கு மட்டும் விருது கொடுத்தால் பிரச்சினை வரக்கூடும் என்று கருதி, (எப்போதோ கொடுத்திருக்க வேண்டிய) CNR ராவ்-க்கும் இப்போது சேர்த்து வழங்கியுள்ளது நல்ல நகைச்சுவை.

நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில், கண்கூடாக பலன் தரும் சிலபல சாதனைகளை செய்தவர்களுக்கு மட்டும் தான் விருது என்றால், ஏற்கனவே (சமீப காலகட்டத்தில்) பாரத ரத்னா வழங்கப்பட்டவர்களில் சிலபலர் தேற மாட்டார்கள் என்பதை கவனிக்க வேண்டும். சச்சின் உட்பட இதுவரை 43 நபர்கள் இவ்விருதை பெற்றுள்ளனர். அப்பட்டியலில், 10 தென்னிந்தியர்கள் (அதிலும் முதல் மூவர் 1954-லிலேயே விருது பெற்றவர்கள் என்பதை நினைவு கொள்க!) மட்டுமே இருப்பதில் பெரிய ஆச்சரியம் ஏதும் இல்லை! ’தெற்கு தேய்கிறது, வடக்கு வாழ்கிறது’ என்ற கூற்று இன்று வரை பொருந்துகிறது!

இது போன்ற ஓரவஞ்சனையை காரணம் காட்டியே, பிரபல பாடகி எஸ்.ஜானகி, சென்ற வருடம் பத்மபூஷன் விருதை ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் காரணங்களுக்காகவே எம்ஜியாருக்கும், ராஜிவ் காந்திக்கும் பாரத ரத்னா தரப்பட்டது என்ற பேச்சிலும் நியாயமான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாட்டுக்கு தொண்டு, அதனால் விளைந்த நன்மை ஆகியவை மட்டுமே பாரத ரத்னா விருதுக்கான அளவுகோல்கள் அல்ல. ஒரு மனிதர், ஒரு துறையில் செய்த உயர்ந்த/ஒப்பில்லாத சாதனையை கௌரவப்படுத்தும் விதமாகவும் அது வழங்கப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


அத்தகைய நோக்கில், சச்சினுக்கு விருது வழங்கப்பட்டது சரியே என்றாலும், அவரை விட விளையாட்டுத் துறையில் அதிகம் சாதித்த, இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர், இந்தியாவின் ஒரே செஸ் வைரம், இந்தியாவின் (ஏன் ஆசியாவின்) ஒரே உலக செஸ் சேம்பியன் (5 முறை பட்டம், கடந்த 6 ஆண்டுகளாக undisputed Chess champion of the World) விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்காமல், சச்சினுக்கு மட்டும் வழங்கியதற்கு நியாயமான காரணங்கள் எதுவுமில்லை என்பது நிதர்சனம்!

மேலே குறிப்பிட்டதில், World என்று வலியுறுத்தியதில் ஒரு காரணமுள்ளது. உலகில் 8 (ஒப்புக்குச் சப்பாணி நாடுகளை விட்டு விடலாம்) நாடுகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட்டில், ஒரு டீம் விளையாட்டில், சச்சின் சாதித்ததைக் காட்டிலும், 120 நாடுகளில் விளையாடப்படும், அன்றிலிருந்து இன்று வரை கடுமையான போட்டி நிலவி வரும், தனிமனித விளையாட்டான செஸ்ஸில் ஆனந்த் சாதித்தது மிக மிக மிக அதிகம் என்பதை அவர் சாதனைகளை உற்று நோக்கினாலே போதும்.

2012-ல் நான் எழுதிய இடுகையிலிருந்து சில விஷயங்களை பகிர்கிறேன்.



”இந்தியாவின் முதல் உலக ஜூனியர் செஸ் சேம்பியன், முதல் கிராண்ட் மாஸ்டர், முதல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர், துரித ஆட்டம், காய்களை பார்க்காமல் ஆட்டம், மொத்தப் புள்ளிகள் என்ற 3 பிரிவுகளிலும் உலகப் பிரசத்தி பெற்ற ஏம்பர் செஸ் டோர்னமண்ட் பட்டத்தை தனியொருவராக வென்ற முதல் செஸ் ஆட்டக்காரர் என்று பல முதல்கள் ஆனந்தின் செஸ் வாழ்க்கையில் விரவி இருக்கின்றன. அதோடு, இந்தியாவின் ஒரே உலக செஸ் சேம்பியன், கோரஸ் டோர்னமண்ட் பட்டத்தை 5 முறை வென்ற ஒரே மனிதர், மைன்ஸ் செஸ் பட்டத்தை 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்ற ஒரே ஆட்டக்காரர் என்று நாம் பிரமிக்கத்தக்க “ஒரே” ஒருவர் ஆனந்த் மட்டுமே. மிக உயரிய விருதாக கருதப்படும் செஸ் ஆஸ்கார் பட்டத்தை ஆனந்த் 6 முறை வென்றுள்ளார்.

இந்தியாவின் இரண்டாம் உயரிய விருதான பத்ம விபூஷனையும் ஆனந்த் பெற்றிருக்கும் நிலையில், ஒரு விளையாட்டு வீரருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமெனில், அதற்கு ஆனந்த் ஒருவரே மிக்க தகுதி படைத்தவர் என்று தாராளமாக சொல்ல முடியும்.”


மேலும், கடந்த 22 ஆண்டுகளாக ஆனந்த் நிகழ்த்தியுள்ள சாதனைகளால் இந்தியாவில் செஸ் விளையாட்டில் பெரும் ஆர்வம் ஏற்பட்டு, ஒரு செஸ் புரட்சியே நடந்துள்ளது. இப்போது இந்தியாவில் 34 கிராண்ட் மாஸ்டர்களும், 70-க்கும் மேற்பட்ட இண்டர்நேஷனல் மாஸ்டர்களும் உள்ளனர். பணம் அதிகம் புழங்காத செஸ் விளையாட்டில், இத்தகைய மறுமலர்ச்சியை, ஆனந்த் தனியொரு மனிதராக நிகழ்த்திக் காட்டியுள்ளார் என்றால் அது மிகையில்லை. இதை நிகழ்த்தியும், 27 ஆண்டுகளாக, இன்று வரை (44 வயது வரை) இந்தியாவின் தலை சிறந்த ஆட்டக்காரராக விளங்கி வருகிறார்! இவற்றுக்கும் மேல், ஆனந்த் எவ்வகையான சாதனை செய்து, பாரத ரத்னாவுக்கு ஏற்புடையவராக ஆக முடியும் என்று புரியவில்லை.

சௌரவ் கங்குலி, ஆனந்த் வெளிநாட்டில் (ஸ்பெயின்) அதிகம் தங்கி இருப்பதால், அவருக்கு பாரத ரத்னா வழங்க ஒரு தயக்கமிருக்கலாம் என்று கூறியிருப்பதை ஏற்க இயலாது. வெளி நாட்டவரான நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்கும்போது, வெளிநாட்டில் தங்கியிருக்கும் “இந்திய” ஆனந்துக்கு வழங்குவதில் என்ன தயக்கம்! ஆனந்த் வட இந்தியராக இருந்திருந்தால், அவரது மகா சாதனைகளுக்கு அவருக்கு இந்நேரம் பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டதற்கு, கிரிக்கெட் பிரபல விளையாட்டு என்பதனால், என்ற கூற்றை ஓரளவு தான் ஏற்க முடியும். பாரத ரத்னா பீம்சென் ஜோஷி மாமேதை என்பதில் ஐயமே இல்லை. ஆனால், அவரது ஹிந்துஸ்தானி இசையை எத்தனை சாதாரணர்களால் புரிந்து ரசிக்க இயலும். அதனால், பிரபலம் என்பது அளவுகோல் ஆகாது. உண்மை என்னவெனில், ஆனந்த் போல அல்லாமல், சச்சினின் இமேஜ் திறமையாக உருவாக்கப்பட்டு பேணிக் காக்கப்பட்டது. மீடியாவும் அதில் பங்களித்தது.

ஆனந்த், தனது ஒவ்வொரு பெரும் வெற்றிக்குப் பிறகு, மீடியாவில் தோன்றி, அதற்கான அவரது உழைப்பை, சிரமங்களைப் பற்றி பெரிய அளவில் பேசியதில்லை. அதனால், செஸ் விளையாட்டு குறித்து ஓரளவு அறிந்தவர் மட்டுமே, அவரது ஹிமாலய சாதனையின் வீச்சை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், சச்சினுக்கு பல மும்பை (சினிமா, அரசியல், தொழில்துறை) பிரபலங்களின் ஆதரவு சதாசர்வ காலமும் இருந்து வருகிறது. தெற்கில் இருக்கும் பிரபலங்களும், இந்திய செஸ் ஃபெடரேஷனும் இது போன்ற ஒரு status-ஐ ஆனந்துக்கு ஏற்படுத்த தவறி விட்டனர். இதனாலேயே, ’சச்சினுக்கு பாரத ரத்னா’ என்பது கடந்த 2 ஆண்டுகளாக கேட்டது போல ஆனந்துக்கு பாரத ரத்னா என்ற கோரஸ்/கோஷம் எந்த மட்டத்திலும் பெரிதாக கேட்காததற்கு இன்னொரு முக்கியக் காரணம்.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே சச்சினை ராஜ்யசபா உறுப்பினராக ஆக்கியுள்ளது. இப்போது, சரியான சூழலில், அவருக்கு பாரத ரத்னா வழங்கி அவரை காங்கிரஸ் அனுதாபியாக மாற்றியிருக்கிறது. மெல்ல மெல்ல, அவரை தேர்தல் பிரச்சாரத்துக்கு ஓரளவுக்கு பயன்படுத்திக் கொள்ள ஒரு யுக்தியாக இது இருக்கலாம். நன்றியுணர்ச்சி சச்சினுக்கு மட்டும் இல்லாமல் இருக்குமா?!? இறுதியாக, சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கக்கூடாது என்பதல்ல வாதம். அவரை விட மகத்தான (விளையாட்டில்) சாதனையாளரான உலக செஸ் சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்காததில் உள்ள நியாயமின்மையும், அரசியல் சார் ஓரவஞ்சனையும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.



இந்த இரண்டு கட்டுரைகளை (ஒன்று ஆனந்த் பற்றி, ஒன்று சச்சின் பற்றி) கட்டாயம் வாசிக்கவும்.

Viswanathan Anand is as precious as Sachin Tendulkar -----
http://www.rediff.com/sports/slide-show/slide-show-1-viswanathan-anand-is-as-precious-as-sachin-tendulkar/20131109.htm#5

Master Blaster or Master Laster: A revisionist look at Sachin Tendulkar’s career -----
http://www.livemint.com/Opinion/PKgPHTk5wKn8DZLRpCtCyK/Master-Blaster-or-Master-Laster-A-revisionist-look-at-Sachi.html

- எ.அ.பாலா

Thursday, November 07, 2013

தீயா வேல செய்யணும், ஆனந்து! விஷி ஆனந்த் vs கார்ல்ஸன் - செஸ் 2013

செஸ் விஸ்வநாதன் ஆனந்துக்கு ‘உலக நாயகன்’ என்பது கமலுக்கு ரவிக்குமார் வழங்கிய பட்டம் போன்றதன்று.  அவர் அங்கீகரிக்கப்பட்ட செஸ் உலக நாயகன், 5 முறை அப்பட்டத்தை வென்றுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும், 2008 மற்றும் 2010-ல் முறையே விளாடிமிர் க்ராம்னிக், டொபோலோவ் ஆகிய 2 ஜாம்பவன்களுக்கு எதிராக ஆடி அவர் வென்றதைப் போன்ற சாதனைகளை இனி ஒரு இந்தியர் அடுத்த 25 ஆண்டுகள் நிகழ்த்தப்போவதில்லை என்று தாராளமாகக் கூற முடியும். தனது 18 வயதிலேயே பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் ஆனந்த் ஒருவரே.

ஆனந்த்-கெல்ஃபாண்ட் 2012 உலக சேம்பியன்ஷிப் போட்டியின் ஆட்டங்கள் அத்தனை சிலாகியமில்லை என்று கூறலாம். ஆனந்த் தனது attacking, aggressive அணுகுமுறையை கைவிட்டு, சற்றே பாதுகாப்பு ஸ்டைலில் விளையாடியதை கார்போவ், கேஸ்பரோவ் உட்பட சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். கேஸ்பரோவ் ஆனந்த் ஒய்வு பெறலாம் என்று கூட கூறினார்.

ஆனந்துக்கு 43 வயது ஆன பின்னும், அவரால் இந்தியாவில் ஒரு செஸ் மறுமலர்ச்சி உண்டான பின்னும், பல கிராண்ட் மாஸ்டர்கள் இந்தியாவில் உருவாகி இருந்தாலும், அவரது செஸ் திறன், மன வலிமை, சேம்பியன் குணம் (இவற்றில் ஓரளவு) கொண்ட ஒரு செஸ் ஆட்டக்காரர் கூட இந்தியாவில் இன்னும் உருவெடுக்கவில்லை என்பது தான் யதார்த்தம். மற்ற விளையாட்டுக்களில், இந்தியாவில், சேம்பியன் தரத்தில் ஒருவருக்கு மேல் இருந்தாலும் (டென்னிஸ்- லியாண்டர், மகேஷ், பாட்மிண்டன் -சாய்னா, சிந்து, கிரிக்கெட்- பலர், தடகளம்- உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ்...), செஸ்-ஐ பொறுத்தவரை,  கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக, ஆனந்த் ஒருவர் தான் உலகத்தரம் கொண்ட ஒரே சேம்பியன் ஆட்டக்காரர்.

ஆனால், மற்ற நாடுகளில், சிலபல குறிப்பிடத்தக்க ஆட்டக்காரர்கள், உலகத் தரத்தில் உருவாகியிருக்கிறார்கள் - லெவான் ஆரோனியன், ஹிகரு நாக்கமுரா, ஃபேபியானோ, செர்கி கராக்கின், மோரோசவிச், மைக்கேல் ஏடம்ஸ், க்ரைசக் அலெக்ஸாண்டர், எடின் பேக்ராட், வேங்க் ஹோ, மமெடயரோவ் போன்றவர்கள்.

சரி, கார்ல்சனுக்கு வருவோம். அவருக்கு 7வது வயதில் தான் செஸ் மேல் ஆர்வம் ஏற்பட்டது. மிக குறுகிய காலத்திலேயே, தனது சற்றே தடாலடி ஆட்டத்தாலும், வித்தியாசமான ஓப்பனிங் அணுகுமுறையாலும் பலரையும் தன் பால் ஈர்த்து விட்டது நிஜம். அதே கார்ல்சன் தனது 12-வது ஏதோ ஒரு செஸ் போட்டியில் சரியாக விளையாடாமல், சுய பச்சாதாபத்தில். “இப்படி செஸ் ஆட்டத்தில் துளித் திறமையின்றி நான் ஏன் பிறந்தேன்?!?” என்று தன்னையே நொந்து கொண்டுள்ளார் :-)

8 வருடங்களுக்குப் பின், அவர் உலகின் நம்பர் 1 ஆட்டக்காரர் (ரேட்டிங் புள்ளிகள் 2872, செஸ் வரலாற்றில் கேஸ்பரோவ் உட்பட யாரும் தொடாத சிகரம் இது) ஆனது மட்டுமன்றி, ஒரு மெகா ஸ்டாராக, விளம்பரங்கள், தோற்றங்கள் வாயிலாக 2013-ல் 3.5 மில்லியன் டாலர்களுக்கு மேல் சம்பாதித்தார்.  கேஸ்பரோவைப் போலவே, ஆனால் தனது 22-வது வயதிலேயே, டைம் பத்திரிகையின், உலகில் மிக்க செல்வாக்கு கொண்ட டாப் 100 நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் கார்ல்சன்.

கார்ல்சன் மார்ச் 2013-ல் நடந்த, உலகின் டாப் 8 ஆட்டக்காரர்கள் பங்கு பெற்ற, 14 சுற்றுகள் கொண்ட மிகக் கடினமான Candiates tournament-ல் முதலிடம் பெற்று, ஆனந்துக்கு போட்டியாளராக (challenger) அறிவிக்கப்பட்டார்.  யார் ஆனந்துக்கு போட்டியாளராக வருவார் என்பதை கடைசி சுற்று வரை சொல்ல முடியாத அளவுக்கு, த்ரில்லிங்காகவும், பல அருமையான ஆட்டங்கள் கொண்டதாகவும் இந்த Candiates tournament இருந்தது.  இறுதி 3 சுற்றுகளில் 2 தோல்விகளை கார்ல்சன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த் இதை கவனத்தில் கொள்வது மிக அவசியம் :-)

போட்டி முடிவில் அவரும் கிராம்னிக்கும் சம புள்ளிகளில் (8.5/14) இருந்தும், அதிக வெற்றிகள் பெற்றவர் என்ற கணக்கில், கார்ல்சன் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்!  ஆனந்தே, இதை Best ever Candidates tournament in history என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Candidates tournament ஆட்டங்களை இங்கே ஆடிப்பார்க்கலாம்!
http://www.chessgames.com/perl/chess.pl?tid=80233

இவற்றில் மிகச் சிறந்ததாக நான் கருதுவது இவை:
http://www.chessgames.com/perl/chessgame?gid=1712941 - Aronian vs Gelfand
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713231 - Svidler vs Carlsen
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713866 - Aronian vs Kramnik
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713636 - Carlsen vs Ivanchuck
http://www.chessgames.com/perl/chessgame?gid=1713488 - Gelfand vs Aronian
http://www.chessgames.com/perl/chessgame?gid=1714070 - Carlsen vs Svidler
http://www.chessgames.com/perl/chessgame?gid=1714073 - Ivanchuck vs Kramnik

கார்ல்சனின் செஸ் வலிமைகள், அவரது பயமின்மை, டிராவுக்கு (draw)  ஆடாமல் கடைசி வரை போராடும் குணம், வித்தியாசமான தொடக்க ஆட்ட அணுகுமுறைகள், தன்னம்பிக்கையும், உடல் திடமும் தரும் மனவலிமை ஆகியவை. சமீபத்தில் நடந்த Sinquefield Cup போட்டி ஆட்டத்தில், கஷ்டமானதொரு பொசிஷனிலிருந்து திறமையாக தப்பித்து, ஆட்டத்தை சமநிலைக்கு எடுத்து வந்து, லெவன் ஏரோனியன் டிரா கேட்டும் தர மறுத்து, மெல்ல மெல்ல தனது பொசிஷனை பலப்படுத்திக் கொண்டு, 70 நகர்த்தல்களுக்குப் பின் கார்ல்சன் ஆட்டத்தை வென்றார். ஒரு மலைப்பாம்பு தனது இரையை சுற்றிக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கிச் சாகடிக்கும் விதத்துக்கு நிகரானது இது!

”Carlsen is also one of the most talented players from any generation. He will be ridiculously difficult to play against” என்று ஒப்புக் கொள்ளும் ஆனந்த், தான் under dog ஆக குறிப்பிடப்படுவது பற்றி அதிகமாக சிந்திப்பதில்லை என்றும், தனது உழைப்பு, ஆற்றல், அனுபவம் இவற்றைக் கொண்டு போட்டியை நல்ல முறையில் எதிர்கொள்வதில் மட்டுமே தனது கவனம் முழுதும் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனந்தின் மேல் தற்போது லேசான கடுப்பில் இருக்கும் கேஸ்பரோவ், கார்ல்சனுக்கு ஆலோசகராக இருப்பது, கார்ல்சனுக்கு பலன் தரும் விஷயமே! கார்ல்சனுக்குத் தான் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகக் கூறும் கேஸ்பரோவ், ஆனந்தை வெற்றி கொள்வது அவ்வளவு சுலபமில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

இறுதியாக, ஆனந்த் 2008, 2010-ல் விளையாடியது போல தொடக்க ஆட்டத்தில் சிறப்பாக ஆடி, நடு ஆட்டத்தில் (middle game) நுழையும்போது, சற்றே சாதகமான பொஸிஷனுடன் இருக்க வேண்டியது அவசியம். அது போல, வெள்ளைக் காய்களோடு விளையாடும்போது, aggression, சில சமயங்களில் novelty, அவசியம்.  மெத்தனமாக (passive)  ஆடினால், கார்ல்சன் கை ஓங்கி விடும் அபாயம் உள்ளது.  இந்த செஸ் உலகப்போட்டி, ஃபிஷர் vs ஸ்பாஸ்க்கி, காஸ்பரோவ் vs கார்போவ் உலகப் போட்டிகளுக்கு நிகரான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருகிறது என்று கூறினால் அது மிகையாகாது.

நேரம் கிடைக்கும்போது, போட்டியின் interesting ஆட்டங்கள் குறித்து எழுதலாம் என்ற உத்தேசம் இருக்கிறது.  பார்க்கலாம்!

எ.அ.பாலா

Friday, November 01, 2013

பெருமாள் பெயரில் ஒரு நூதனத் தீண்டாமை!



’பெருமாளுக்குத் தீட்டு’ புகழ் தேவநாத சுவாமி கோயிலில் (கடலூர் மாவட்டம், திருவந்திபுரம்), இன்னொரு மகாஅவலம் பல ஆண்டுகளாக நடந்தேறி வந்திருந்தாலும், இப்போது தான் அது கலெக்டர் (மனு வடிவில்) வரை சென்றுள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்! இக்கோவிலுக்கு அருகில், ”குரு பரம்பரை”யின் கடை ஆசார்யரான மணவாள மாமுனிகளுக்கு கோயில் ஒன்றுள்ளது.   பல ஆண்டுகளாக, ஐப்பசி மாதம் நடைபெறும் மாமுனிகளின் உத்சவ சமயம், அவரது விக்ரகத்தை வீதி ஊர்வலமாக எடுத்து வரும் வழக்கம் உள்ளது.  மாமுனிகளின் விக்ரகம் தேவநாத சுவாமி கோயில் முன் வருகையில், கோயில் கதவு மூடப்பட்டு விடும்.  அதாவது பெருமாள் மணவாள மாமுனிகளை பார்த்தால், பெருமாளுக்குத் தீட்டும் தோஷமும் ஏற்பட்டு விடுமோ என்னவோ?!?!

வைணவ திவ்யதேசமான தேவநாத சுவாமி ஆலயம் வடகலை சம்பிரதாயக் கோயில், மணவாள மாமுனிகள் தென்னாச்சார்ய வழி ’குரு பரம்பரை’யின் கடைசி குரு.  உடையவர் இராமானுஜரின் அவதாரமாகவும் (ஏராரும் எதிராசன் என உதித்தான்) அரங்கநாதர்க்கே குருவாகவும் கருதப்படுபவர்.  அதாவது, பெருமாளில் தொடங்கி, மாமுனிகளில் முடியும் குரு பரம்பரையானது ’ஆச்சார்ய ரத்தின மாலை போன்றது.  மாமுனிகள் வைணவம் சார்ந்த பல சிறந்த கிரந்தங்களை இயற்றியுள்ளார்.

கோயில் கதவுகளை மூடி,   வைணவம் தழைக்க வந்த ஒரு பெருந்தகையை இப்படி அவமானப்படுத்துவது கூட ஒரு வகையான தீண்டாமையே என்றும், மணவாள மாமுனிகள் ஊர்வலம் செல்கையில் பெருமாள் கோயில் கதவுகளை மூடக்கூடாது என்றும் ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ரட்சண சபையின் தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசரும், இன்னும் சிலபல பக்தர்களும் கலெக்டரிடம் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர், இந்த ஆண்டு கோயில் கதவுகள் மூடப்பட்டால், நீதிமன்றத்துக்கு செல்லப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

அப்படியும், இந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதியன்று கலை 9 மணி அளவில், மணவாளமாமுனிகள் விக்ரகம், ஊர்வலமாக தேவநாத சுவாமி கோயிலைக் கடக்கையில், கோயில் கதவுகள் மூடப்பட்டன.  இரு தரப்பினருக்கும் இடையே பலத்த வாக்குவாதமும் நிகழ்ந்து போலீஸ் வந்து அமைதிபடுத்த வேண்டியிருந்தது. கோவிலுக்கு வந்த பொது மக்கள் அதிர்ந்து போய் இதை கவனித்துக் கொண்டிருந்தனர்.  கோயில் பணியாளர்கள் இருவர், இந்த அவலக் கூத்தை புகைப்படம் எடுத்த பத்திரிகை சார்ந்த புகைப்படக்காரர்களை மிரட்டி, அவ்விடத்தை விட்டு துரத்த முயன்றுள்ளனர். 

இவை எல்லாவற்றுக்கும் உச்சம், கோயில் தலைமை அதிகாரி, “மணவாள மாமுனிகள் ஊர்வலத்தின்போது கோயில் கதவுகளை மூடுவது என்பது தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு சம்பிரதாயம் (கடவுளே, கடவுளே, கடவுளே!!!!!) இந்த சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் அனாவசியமாக இதை ஒரு பிரச்சினை ஆக்கியிருக்கிறார்” என்று சொல்லியிருப்பது தான்!

இவர் போன்ற ஆட்களையும், அண்ணல் இராமானுஜர் போதித்த வைணவத்துக்கு உரித்த விரிந்த நோக்கமும், அடக்கமும், புரிதலும், அடியார்க்கு அடியராய் இருக்கும் பண்பும் அறவே இல்லாத இந்த கோயில் அர்ச்சகர்களையும்அந்த தேவநாதப் பெருமாள் கூட திருத்த முடியாது!!!

வடகலையாருக்கு மணவாள மாமுனிகள் ஆகாமல் போனதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது. அது சற்றே நீண்ட சமாச்சாரம் என்பதால், விவரமாக அடுத்த இடுகையில் சொல்கிறேன்.  பொறுத்திருக்கவும்.

எ.அ.பாலா

பிற்சேர்க்கை: இதை வடகலை vs தென்கலை சண்டை சச்சரவாக மட்டும் எடுத்துக் கொள்ள இயலாது.  ஏனெனில், பார்ப்பனர் அல்லாத வைணவர் பலரும், இராமானுஜரைப் போலவே, மணவாள மாமுனிகளையும் வழிபாட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய, வைணவம் தழைக்க அவதரித்த, ஒரு மகானாகவே கருதி, பல வைணவ திவ்ய தேசங்களில் நடைபெறும் மாமுனிகளின் திருநட்சத்திர வைபவத்தில் கலந்து கொள்கின்றனர்.

Thursday, October 17, 2013

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் சச்சின் டெண்டுல்கர் ?!?!



ஓய்வு என்ற முடிவெடுத்த பின், 2 டெஸ்ட் போட்டிகள் எதற்கு என்ற எண்ணம் என் மனதிலும் எழுந்தது. 200 டெஸ்ட்கள் என்ற இலக்குக்கு வேண்டி சச்சின் ஆடுகிறார் என்பது தெளிவு! இது, சச்சின் ரெகார்டுகளுக்கு ஆடுபவர் என்று கூறுபவர்களின் வாதத்திற்கு வலிமை சேர்ப்பதாகவே உள்ளது.  உலகின் தலை சிறந்த மட்டையாளரான பிராட்மேன் 99.94 என்று அவரது டெஸ்ட் சராசரி இருந்த நிலையில், ஓய்வு பெறவில்லையா ? சச்சின் ஏன் இதை யோசிக்கவில்லை?

இது ஒரு புறமிருக்க, ஒரு 2 ஆண்டுகள் முன்னமே அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று சிலபலர் கூறுவதிலும் அர்த்தம் இருப்பதாகவே தோன்றுகிறது.  சச்சின் தனது கடைசி 25 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில், ஒரு சதம் கூட அடிக்கவில்லை, 4 ஐம்பதுகள், சராசரி 30.04, அதாவது அவரது மொத்த சராசரியை (53.86) விட 24 ரன்கள் குறைவு! இதை, மும்பையைச் சேர்ந்த மற்றொரு ஜாம்பவானின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இன்னும் தெளிவு கிடைக்கும்.  கவாஸ்கர், தனது கடைசி இன்னிங்க்ஸில், பந்து நர்த்தனமாடிய ஒரு square turning பங்களூர் ஆடுகளத்தில், பாகிஸ்தானின் மிகச் சிறந்த 3 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகத் திறமையாக விளையாடி 96 ரன்கள் எடுத்தார். இந்தியா தோற்றது என்பது வேறு விஷயம்!  கடைசி 25 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில், கவாஸ்கர் எடுத்தது, 4 சதங்களும், 6 ஐம்பதுகளும், சராசரி 58 ரன்கள் !!!

கிரிக்கெட் மேதையான சச்சின், ஏன் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக, தன்னை இவ்வாறு வதைத்துக் கொள்ள வேண்டும் !?  அவர் லெவலுக்கு, வயதுக்கு எதிரான அந்த ஜீவமரண போராட்டம் பார்க்க சகிக்காமல் இருந்தது. கிரிக்கெட்டின் மேல் கொண்ட காதல் தான் காரணம் என்று நினைக்கிறேன்.  தனது ஃபார்ம் திரும்பி விடும் என்ற அவரது எதிர்பார்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்! ஆனால், இளமை திரும்புவதில்லை என்பதை சற்று மறந்து விட்டார்.  28 வயதில் சுலபமாக கை கூடியவைகளை 38-ல் கை கூட வைக்க சச்சினால் கூட இயலாது என்பது தான் யதார்த்தம்.  Sachin should have gone in a blaze of glory for the ultimate cricket genius  he is, but sadly that did not happen.  அவரது கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தாலும், கடைசி 2 ஆண்டுகளில், சாமானிய பந்து வீச்சாளர்களிடமெல்லாம் போராடிய சச்சினின் இமேஜ் மனத்திரையில் விலக மறுக்கிறது. 

சமகாலத்தில் விளையாடிய (சச்சினுக்கு நிகரானவர் என்று சொல்லத்தக்க!) லாராவின் (கடைசி 25 இன்னிங்க்ஸ்கள்) புள்ளி விவரங்கள் பிரமிக்க வைப்பதாக உள்ளது. அவரது சராசரி 45 ரன்கள் என்பதை விட, தனது கடைசி வருடத்தில் லாரா, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா என்ற பலமான அணிகளுக்குக் எதிராக, 2 சதங்களும், 2 இரட்டைச்சதங்களும் எடுத்தார்.  அதாவது, ஓய்வு பெறும் வரையில், லாராவின் ஒளிக்கீற்று பிரகாசமாகவே எரிந்தது! சச்சின் போன்ற ஒரு மேதை, கலைஞர் என்ற நிலையிலிருந்து கணக்காளராக மாறி விட்டது, அவரது பரம் விசிறிகளுக்கு சற்று வருத்தமான விஷயமே. விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டைலில் ஆரம்பித்தவர், இப்படி பாய்காட் போல சர்வைவலுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டது அதை விட வருத்தமான விஷயமே!

கபில்தேவும் ஹாட்லியின் பந்து வீச்சு ரெகார்ட்டை முறியடிக்க, பரிதாபமாக மூச்சிரைக்க பந்து வீசிய அந்த கடைசி டெஸ்ட்கள் ஞாபகத்திற்கு வருகிறது. முரளிதரன் அந்த ரெகார்டை கபளீகரம் பண்ணி விட்டு, இலக்கை எங்கோ எடுத்துச் சென்று விட்டார் என்பது வேறு விஷயம்!  இப்போது, சச்சின் தனது விருப்பப்படி (இந்திய மண்ணில்) ஓய்வு பெறுவதற்காக, தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சுருக்கப்பட்டு விட்டது. இதற்கு முன்னால், யாருக்காகவும் இப்படி நடந்ததாக ஞாபகமில்லை! வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட் தொடரை விட (வலிமையான அணிக்கு எதிரான) தென்னாப்பிரிக்கத் தொடர் மிக மிக முக்கியமானது.  சச்சின் ஓய்வு பெற்றிருந்தால், இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரே நடைபெற்று இருக்காது என்பது தான் யதார்த்தம்.  மும்பையில் தான் ஓய்வு என்று சிறுபிள்ளை போல ஏன் இந்த பிடிவாதம் என்றும் புரியவில்லை!?

- எ.அ.பாலா

பிகு: 24 வருடங்களாக, நான் சச்சினின் பரம விசிறி. அவரது 90% ஆட்டங்களை நேரில் அல்லது டிவியில் ரசித்து வந்திருக்கிறேன்.

Monday, July 29, 2013

வாலி(ப) சகாப்தம்

வாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா
வாலி ஒரு மகா கவிஞன் என்பதைத் தாண்டி அவரின் மிகப்பெரிய சாதனையாக நான் கருதுவது, தனது கடைசி மூச்சு வரை தன்னை RELEVANT ஆக வைத்துக் கொண்ட தன்மையைத் தான். இறுதி வரை தன்னை புதுப்பித்துக் கொண்டே இருந்தார் என்று தான் கூற வேண்டும். அதனாலேயே, அவரால் எம்ஜியார் தொடங்கி தனுஷ் வரை ஹிட் பாடல்களை அள்ளி வழங்க முடிந்தது. கண்ணதாசனுக்கு அடுத்து அவரளவுக்கு மொழியை வசப்படுத்தி வைத்திருந்தவர் யாருமில்லை. கற்பனை வளம், சொல் ஆளுமை (vocabulary), தமிழ் மேல் காதல் என்ற மூன்றும் அதீதமாக வாய்க்கப் பெற்றவர் வாலி. 15000-க்கும் மேல் பாடல்கள் புனைந்த அவர், தமிழ் பாடலாசிரியர்களில் சச்சின் டெண்டுல்கர்.

ஸ்ரீரங்கம் அருகே திருப்பராய்த்துறையில் 1931-ல் டி.எஸ்.ரங்கராஜனாக் பிறந்து, சென்னை கலைக்கல்லூரியில் பயின்று, வாலி சில ஆண்டுகள் ஆல் இந்தியா ரேடியோவில் பகுதி நேர வேலை பார்த்தவர். சினிமா வாய்ப்புக்காக அலைந்த சமயத்தில், அவருக்கு உதவியவர்களில் குணச்சித்திர நடிகர் வி.கோபாலகிருஷ்ணனும், பாடகர் டி.எம்.எஸ்ஸும் முக்கியமானவர்கள். வாலி வார்த்தைச் சித்து விளையாட்டில் கை தேர்ந்தவர் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் டி.எம்.எஸ். வாலி டி.எம்.எஸ்-ஸுக்கு ஒரு போஸ்ட் கார்டில் அனுப்பிய கவிதை, இசை வடிவம் பெற்று, டி.எம்.எஸ்-ஸாலேயே பாடப்பட்டு ”கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்” என்று AIR-ல் பெரும்பிரபலம் அடைந்தது. ’அழகர் மலைக்கள்ளனாக’ ஆரம்பித்த வாலியின் சகாப்தப் பயணம் ‘காவியத்தலைவனாக’ முடிவுற்றதில் ஆச்சரியமில்லை!



எம்ஜியாருக்கு வாலி எப்போதும் “ஆண்டவரே” தான். எம்ஜியாருக்காகவே எழுதப்பட்ட ஹிட் பாடல்கள் தான் எத்தனை!

1. தரை மேல் பிறக்க வைத்தான்
2. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
3. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
4. கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்
5. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு
6. கண் போன போக்கிலே கால் போகலாமா
7. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே


என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

வாலி என்று தனக்கு நாமகரணம் செய்து கொண்டதற்கு அவருக்கு ஓவியர் மாலி மேல் இருந்த அபிமானமே காரணம். வாலியே ஓரளவுக்கு நன்றாக வரைவார். வசன கவிதையில் / பேச்சில் எதுகை மோனையில் அவரை விஞ்ச இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும். அவரது திரைப்பாடகளில் மட்டுமன்றி, அவரது கலகலப்புப் பேச்சிலும் ஒரு தன்னிச்சையான இயல்பு (spontaneity) இருந்ததும், அவரது பேச்சை கேட்கத் தூண்டுவதாக இருந்தது.
“ஊக்குவிக்க ஆளிருந்தா ஊக்கு விக்கறவன் கூட தேக்கு விப்பான்”

ஒரு முறை வாலி வீட்டுக்கு ஒரு பாம்பு வந்த விஷயம், நாளிதழ்களில் முக்கியச் செய்தியாக வந்து விட, பலரும் அவரை விசாரிக்க, ஒருவர் மட்டும் “உங்க வீட்டுக்கு மட்டும் ஏன் பாம்பு வர வேண்டும்?” என்று குசும்பாக கேட்க, வாலி தனக்கே உரித்தான பாணியில், “படமெடுக்கறவங்க எவ்வளவோ பேர் வராங்க, பாம்பு வந்தா என்னய்யா!” என்று ஒரு போடு போட்டாராம். பிறிதொரு சமயம், எம்ஜியார், வாலியை வெறுப்பேத்த, ”உலகம் சுற்றும் வாலிபன்” படத்தின் டைட்டில் கிரெடிட்ஸில், பாடலாசிரியாராக வாலியின் பெயரை போடப் போவதில்லை என்று சொன்னபோது, வாலி உடனே “அப்படி உங்களாலே படத்தை ரிலீஸ் பண்ணவே முடியாது” என்றாராம். எம்ஜியார் விடாப்பிடியாக, ‘பண்ணிக்காட்டறேன் பாருங்க’ என்று கூற, வாலி “அதெப்படி ’வாலி’ இல்லாம நீங்க படத்தை ‘உலகம் சுற்றும் பன்’ என்றா ரிலீஸ் பண்ணுவீங்க?!” என்றவுடன் எம்ஜியார் சிரித்து விட்டு வாலியை தழுவிக் கொண்டாராம்.

அய்யங்காரான வாலிக்கு மீன் குழம்பு பிடிக்கும் என்பது ஒரு பிரச்சினையே இல்லை. சிலபல சமயங்களில் கட்டாயத்தின் பேரிலோ (நட்பின் பேரிலோ!) அவரது அரசியல் சார்பு ஜால்ரா தான் சற்று அயற்சியைக் கொடுத்தது. ஆனால், அதிலும் இருந்த மொழி வளமும், சொல் விளையாட்டும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. எ.கா: ’ஏ.எம், பி.எம் பார்க்காத ஒரே சி.எம் நீ தான்’. வாலியின் (கலைஞருக்கு) ஜால்ரா கவிதை ஒன்றை இங்கே காணலாம்.


இந்தக் கவிதையிலும் (ஆண்டு 2007-ல் எமனிடம் இருந்து நீ என்னை மீட்டாய். அதற்கு முன் ஆண்டு 2006-ல் ஓர் 'உமனிடம்' இருந்து தமிழ் மண்ணை மீட்டாய்), இது தவிர ஓரிரு சமயங்களிலும், வாலி ஜெ.ஜெ-வை கிண்டலாக விமர்சித்திருந்தாலும், புள்ளி விவரங்களுடன் விமர்சகர்களுக்கு பதில் / விளக்கம் தரும் ஜெ.ஜெ, வாலி குறித்து எதுவுமே பேசியதில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அது போல, பெரும்பாலான சினிமா ஆசாமிகள் போல அரசியல் சூழலுக்கு ஏற்றாற் போல் வாலி ஜால்ரா தட்டவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். கருணாநிதி மேல் கடைசி வரை வாலி அபிமானத்துடனே இருந்தார்!

பிடித்த வாலியின் பாடல்கள் என்று பெரிய ஒரு லிஸ்ட் இருந்தாலும், சிலபல பாடல்கள் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

1. வெண்ணிலா வரும் வேளையில் நான் விழித்திருந்தேன், என்னவோ கனவுகளில்...
2. மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டனே
3. மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ
4. கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை
(ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா, வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா - மறக்க முடியாத சரண வரிகள்)
5. வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
6. காதோடு தான் நான் பாடுவேன், மனதோடு தான் நான் பேசுவேன்
7. ஒன்னை நினைச்சே பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே
8. நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்

9. வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
10. அம்மா என்றழைக்காத உயிரில்லையே
11. காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை அம்மா


வாலி பாடலின் ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கியத்துவம் தருபவர். “சீனத்து பட்டு மேனி உந்தன் சிட்டு மேனி” என்ற  பாடலுக்கு, பல்லவி வரிக்கு முன் ஒரு சொல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யாரோ பிரியப்பட, வாலி “செஞ் சீனத்து பட்டு மேனி உந்தன் சிட்டு மேனி” என்று பல்லவியை ஒரு நொடியில் அழகாக்கி விட்டார். வாலிக்குப் பிடித்த பாடல் குறித்து, ஒரு பேட்டியில், ஒரு வரலாற்றைப் பதிவு செய்த வகையில் அமைந்த கண்ணதாசனின் “நிலவைப் பார்த்து வானம் சொன்னது...” பாடலை வாலி பிரமிப்புடன் குறிப்பிட்டு இருக்கிறார். அப்பாடலில் வரும் 

புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது
சொன்ன வார்த்தையும் இரவல் தான் அது
திரு நீலகண்டரின் மனைவி சொன்னது”
என்ற சரண வரிகளை நினைவு கூர்க!

வாலி கண்ணதாசன் மேல் பெருமதிப்பு வைத்திருந்தவர். சமீபத்தில் வாலி பற்றிய சந்தக்கவிதையாக எழுதப்பட்டதில் “கண்ணதாசன் கொடி அகற்றி கண்ணதாசனை வென்றாய்” என்பதை ஏற்றுக் கொள்ள வாலி ஒரேடியாக மறுத்து, பின்னர் அவ்வரிகள் “கோடி கோடி கனவோடு கோடம்பாக்கம் வந்தாய்; கண்ணதாசன் கொடியோடு கொடி நாட்டி நின்றாய்” என்று மாற்றப்பட்டது.

எண்பத்து ஒன்று வரை தமிழ் எழுதி
கண்பட்டும் நிறைவாகவே வாழ்ந்த பின்னும்
மண்பட்டு உன் உடல் போகையிலே
புண்பட்டுப் போனாளய்யா தமிழன்னை!


என்று அவருக்கு உரித்தான ஸ்டைலிலும், “ராஜனுக்கு ராஜன் எங்க ரங்கராஜன் தான்” என்ற அவரது தசாவதார பாடல் வரிகள் வாயிலாகவும், வாலி அவர்களுக்கு அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன். அவரது விஜயத்தால், பரமபதம் இப்போது கலகலப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்

Monday, June 17, 2013

தொடரும் பிஜேபியின் சொதப்பல்

தொடரும் பிஜேபியின் சொதப்பல் - எ.அ.பாலா
 
யுபிஏ அரசின் பல சறுக்கல்களை முன்னிறுத்தி, பாராளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் செய்ததைத் தவிர்த்து, 2014 தேர்தலுக்கு முன்பாக, அரசியல் சூழலை தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ள பிஜேபி எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தோன்றவில்லை. ”பளபளக்கும் இந்தியா” என்ற முழக்கத்துடன், வாஜ்பாயி தலைமையில் 2004 தேர்தலிலும், பின்னர் 2009-ல் அத்வானி தலைமையில் (யுபிஏ அரசின் பிரும்மாண்ட ஊழல்களினால் இருந்த சாதகமான அரசியல் சூழலை பயன்படுத்த இயலாமல்!) பிஜேபி மண்ணைக் கவ்வியது.

தற்போது மீண்டும், காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசின் ஊழல்கள் மற்றும் திடமற்ற பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றினால் மக்களிடையே காங்கிரஸ் கட்சியின் மேல் ஏற்பட்டிருக்கும் பெரிய அதிருப்தி நிலவும் நிலைமையிலும், நரேந்திர மோதியை தேர்தல் பிரச்சாரத் தலைவராக (அதாவது, 2014 தேர்தலுக்கு பிரதம மந்திரியாக மோதியை அறிவிப்பதற்கு அச்சாரமாக) பிஜேபி (RSS அதன் கையை முறுக்கியதன் விளைவாக்) அறிவித்துள்ளதை சொதப்பலின் உச்சம் என்று தான் கூற வேண்டும். பிஜேபியை பின்னாலிருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கு அரசியல் யதார்த்தம் குறித்த அறிவு குறைவு என்பது தெரிந்தது தான்.

அகண்ட பாரதம், ஹிந்துத்வா போன்றவைகளை வைத்துக் கொண்டு மத்தியில் ஆட்சிக்கு வரமுடியாது என்பதை ஆர்.எஸ்.எஸ்/பிஜேபி இன்னும் புரிந்து கொள்ளாதது ஆச்சரியமாக உள்ளது. குஜராத்தில் மோதி சிறந்த நிர்வாகத்தை அளித்து வருவது உண்மை தான் என்றாலும், மோதியை பெரும்பான்மையான இந்திய மக்களால் மதிக்கப்படும் “தேசிய”த்தலைவராக எண்ணுவதில் பெரிய அர்த்தமில்லை. யுபிஏ அரசை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதை மட்டுமே முக்கியக் குறிக்கோளாக பிஜேபி கொண்டிருந்தால், இன்று ஐக்கிய ஜனநாயக முன்னணியிலிருந்து அதன் முக்கியக் கூட்டாளி JD(U) விலகும் நிலை ஏற்பட்டிருக்காது. 2014-ல் ஆட்சியைப் பிடிக்க பிஜேபி அதன் கூட்டணியில் இன்னும் சில பிராந்தியக் கட்சிகளைச் சேர்க்க முனைய வேண்டுமே அன்றி, கூட்டணியில் இருக்கும் கட்சிகளை துரத்தி விடக் கூடாது!

பிஜேபியின் இந்த நிலைமைக்கு ஆர்.எஸ்.எஸ் மட்டுமே காரணமில்லை, பிரதமர் பதவி ஆசை கொண்ட அதன் சில மூத்த தலைவர்களும் தான். 2014-ல் கூட்டணி துணை கொண்டு மட்டுமே ஆட்சிக்கு யாருமே வர இயலும் என்ற சூழலில், பொதுவாக அனைவருக்கும் ஏற்புடைய அத்வானியை பிஜேபி முன்னிறுத்தி இருப்பதே, சமயோஜிதமான முடிவாக இருந்திருக்கும். அத்வானிக்கு வயதாகி விட்டதாலேயே அவர் ஓரங்கட்டப்பட வேண்டும் என்ற வாதத்தில் அர்த்தமில்லை! அவர் ஒருவர் தான் இந்தியாவில் கிழ அரசியல்வாதியா என்ன? மேலும் அவரை விட வயதில் குறைந்தவர்களைக் காட்டிலும் அவர் மன அளவில், உடலளவில் திடமாகவே இருக்கிறார். நாடு முழுதும் நன்கு அறியப்பட்ட, பல கட்சிகளின் தலைமையுடன் நல்லுறவு வைத்துள்ள ஒரு தேசியத் தலைவர் அவர் என்பது தான் யதார்த்தம்.

பிராந்தியக் கட்சிகள் பல மாநிலங்களில் வலிமையுடன் இருக்கும் சூழ்நிலையில், நல்லதொரு கூட்டணியுடன் தேர்தலைச் சந்திக்காமல், 2014 தேர்தலுக்குப் பின் பேரம் பேசி மோதி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்து விடலாம் என்று பிஜேபி நினைப்பது, பகல் கனவாகி விடும் அபாயம் இருக்கிறது. மேலும், 2014 தேர்தலுக்குப் பின், தனிப்பெருங்கட்சியாக காங்கிரஸ் அமைவதிலும் / பிஜேபி அமைவதிலும் வித்தியாசம் இருக்கத் தானே செய்கிறது! இப்போது, மூன்றாவது அணி (இது நடைமுறை சாத்தியம் என்று நான் கருதவில்லை) குறித்த பேச்சு அடிபடுவதற்கும், பிஜேபியின் “மோதி முடிவே” காரணம்.

காங்கிரஸ் கட்சி இந்த குழப்பத்தில், மகிழ்ச்சியாக குளிர் காய்வது, தொலைக்காட்சியில் அதன் தலைவர்களின் பேச்சில் தெளிவாகத் தெரிகிறது. ராகுலை 2014 தேர்தலுக்கு பிரதம மந்திரி வேட்பாளாராக அறிவிப்பதை காங்கிரஸ் தள்ளிப் போடுவதை நல்லதொரு அரசியல் யுக்தியாகத் தான் நோக்க வேண்டும்! சரியான தருணத்தில் காங்கிரசின் பலம் கூடி விட்டது மக்களின் துர்பாக்கியம் தான். எதிர்காலத்தில் மோதி இந்தியப் பிரதமராக ஆக வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மோதி தற்சமயம் சற்றே பொறுமை காத்திருக்கலாம்!

மதச்சார்பின்மையில் பிஜேபியை விட காங்கிரஸ் எந்த விதத்திலும் மேல் இல்லை (எ,கா: 1984 சீக்கியப் படுகொலை) என்றாலும், TMC, JD(U), SP, BSP, BJD, RJD, DMK, NC ... என்று பல பிராந்தியக் கட்சிகள் (இன்றைய லோக்சபாவில் இவைகளின் மொத்த பலம் 163 சீட்டுகள்) மோதியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், பிஜேபி சற்றாவது யோசிக்க வேண்டாமா! தனது பிரதம மந்திரி வேட்பாளர் யாரென்று தீர்மானிக்க பிஜேபிக்கு உரிமை இருக்கிறதா, இல்லையா என்பதல்ல பிரச்சினை. ”கூட்டணி அரசு” காலகட்டத்தில், தக்க ஆலோசனை செய்து, சரியான முடிவெடுப்பது தான் சமயோஜிதமாகும்.

மக்கள் செல்வாக்கு இல்லாத மன்மோகன் சிங்கையே, பல குழப்பங்களுக்கு நடுவில், 9 ஆண்டுகள் காங்கிரஸ், பிரதமராக வைத்திருக்கும்போது, அத்வானி போன்ற ஒரு Tall Leader-ஐ ஓரங்கட்டி தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கோண்டிருக்கும் பிஜேபியைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இதை எழுதும்போது ராஜ்நாத் சிங் மோதிக்கு ஆதரவாக, JD(U)வை குற்றம் சாட்டி, தொலைக்காட்சியில் நமக்குப் புரியாத பாஷையில் (ஹிந்தியில்) ஏதோ சத்தம் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க தமாஷாக இருந்தது :) “இன்று பீகாருக்கு கறுப்பு தினம்” என்றும் முழங்கினார்! பாவம் பிஜேபிக்கு 2014 தேர்தலே கறுப்பாகி விடும் போலிருக்கிறதே!

- எ.அ.பாலா

Monday, June 10, 2013

கல்விக்கு உதவி வேண்டி பணிவான வேண்டுகோள்

கல்விக்கு உதவி வேண்டி பணிவான வேண்டுகோள்
 
அன்பான நண்பர்களுக்கு / வாசகர்களுக்கு:

தமிழ் வலையுலக நண்பர்கள் / வாசகர்கள் ஆதரவோடு, கௌசல்யா என்ற ஏழை மாணவி மருத்துவக் கல்வியை முடித்து, இன்று டாக்டர் கௌசல்யாவாக உருவாகியிருப்பது, மிக்க பெருமையான ஒரு விஷயம். விவரங்கள்  இங்கே காணக் கிடைக்கும்.

http://balaji_ammu.blogspot.in/2006/09/blog-post.html
http://balaji_ammu.blogspot.in/2006/09/kausalya.html
http://balaji_ammu.blogspot.in/2010/08/565.html

அது தவிர, இன்னும் சிலபல சமூக உதவி சார் முயற்சிகளுக்கும், உங்களில் பலர் ஆதரவும், ஊக்கமும் அளித்து வந்துள்ளீர்கள். இவை அனைத்துக்கும் என் பணிவான நன்றிகள்.

சமீபத்தில், டாக்டர் கௌசல்யாவின் ஊரில் (அந்தியூர்) பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ள ஒரு ஏழை மாணவரின் தந்தையிடமிருந்து அவனது மேற்படிப்புக்கு உதவி கேட்டு ஒரு வேண்டுகோள் வந்துள்ளது. அதையும், மாணவனின் கல்விச் சான்றிதழ்களையும், உங்கள் உதவியை பணிவுடன் நாடி, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.









மிகுந்த சிரமங்களுக்கு இடையில் அயராது உழைத்து, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 481 மதிப்பெண்களும், தற்போது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கு 1147 மதிப்பெண்களும் அம்மாணவன் பெற்றிருக்கிறான். பொறியியல் கல்வி பயில மிக்க ஆர்வமாக இருக்கிறான். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில், 200க்கு 197.5 மதிப்பெண்கள் இருப்பதால், நல்லதொரு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க பிரகாசமான வாய்ப்பிருப்பதை உணர்கிறேன்.

பொருளுதவி செய்ய விரும்பும் அன்பர்கள் என்னை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன் அல்லது இங்கே பின்னூட்டத்தில் உங்கள் மின்மடல் முகவரியை இட்டால் கூட போதுமானது. பிறகு பொருளுதவி செய்வதற்கு வேண்டிய விவரங்களை மின்மடல்வழி தருகிறேன். உங்களால் இயன்றதை அளித்து உதவுங்கள்.

balaji_ammu@yahoo.com

நன்றியுடன்
எ.அ.பாலா

Saturday, May 04, 2013

அயர்லாந்து, அம்பானி, சீனா மற்றும் சில

அயர்லாந்து, அம்பானி, சீனா மற்றும் சில

1. 6 மாதங்களுக்கு முன், அயர்லாந்தின் கருக்கலைப்புத் தடைச் சட்டத்தின் காரணமாக, சவீதா என்ற இந்தியப் பெண் அநியாயமாக உயிரிழந்தது நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்து, அங்கு கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்தியாவைப் போல, கூச்சல் போட்டு விட்டு விஷயத்தை சௌகரியமாக மறந்து விடாமல், அங்குள்ள அரசு, அயர்லாந்து தீவிர கத்தோலிக்க நாடாக இருந்தும், அச்சட்டத்திற்கு சில திருத்தங்களை கொண்டு வர இருப்பது வரவேற்கப்பட வேண்டியது. இதற்கு எதிர்ப்பாளர்கள் இருப்பினும், அங்குள்ள பெரும்பான்மை மக்களின் மனித நேயமும், நேர்மையும் பாராட்டத்தக்கது,

2. இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானிக்கு மகாராட்டிர அரசு, மக்கள் வரிப்பணத்தில் Z+ வகை பாதுகாப்பு வழங்கியிருப்பதை, சுப்ரீம் கோர்ட் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. சாமானியனுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலையும், தில்லியில் ஒரு 5 வயது சிறுமி அநியாயமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதையும் கோர்ட் சுட்டிக்காட்டியிருக்கிறது. பணக்காரர்கள் தனியார் பாதுகாப்புக்கான விலையை எளிதாக கொடுக்க இயலும் என்றும் கோர்ட் கூறியிருக்கிறது. கோடிகளில் புரளும் அம்பானி, மக்கள் பணத்தில் தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று சொல்லாதது அவரது வெட்கமின்மையை காட்டுகிறது.

3. நாலைந்து நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் பக்ராம் விமான தளத்திலிருந்து புறப்பட்ட போயிங் 747 வகை கார்கோ விமானமொன்று, கிளம்பிய சில நிமிடங்களிலேயே, தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது, அருகிலிருந்த ஒரு வாகனத்தின் டேஷ்போர்ட் கேமரா, 3 நிமிட வீடியோவாக அவ்விமானத்தின் மரணத்தை பதிவு செய்திருந்ததை, டிவியில் பார்த்தபோது சற்று கலக்கமாக இருந்தது. கூர்ந்த அறிவை ஆயுதமாக பயன்படுத்தி தொழில்நுட்பத்தில் எத்தனை உச்சம் தொட்டாலும், checklist தயாரித்து கவனமாக இருந்தாலும், நம்மை மீறி சிலபல விஷயங்கள் நடப்பதை நம்மால் தடுக்க முடியாது என்பது தெளிவு. அந்த வீடியோவை இங்கே காணலாம். http://edition.cnn.com/2013/05/01/world/asia/afghanistan-bagram-crash-video/?hpt=hp_mid


4. சீனா, இந்திய எல்லையிலிருந்து கிட்டத்தட்ட 18 கி.மீ உள்ளே வந்து, 5 ராணுவ கூடாரங்களை அமைத்து 18 நாட்களாக அழும்பு பண்ணிக் கொண்டிருப்பது குறித்த செய்திகளையும், விவாதங்களையும் ஆங்கில நியூஸ் சேனல்களில் பார்க்கையில், பரிதாபமாகவும் அதே சமயம் நகைச்சுவையாகவும் உள்ளது. இந்தியாவுக்கு வெளிநாட்டுக் கொள்கை என்று எதுவும் கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். முன்பொரு முறை, காஷ்மீர் வாழ் இந்தியருக்கு மட்டும் (இந்தியாவை வெறுப்பேற்றுவதற்காக) சீனா தனி வகை விசா வழங்கியபோதும், அருணாச்சலப்பிரதேசத்தை “தென் திபெத்” என்று கூறி வருவதற்கும், இந்தியா மினிமம் என்ன செய்திருக்க வேண்டும்? திபெத்தை disputed territory- யாகத்தான் இந்தியாவும் பார்க்கிறது என்றாவது (official ஆகவோ unofficial ஆகவோ) அறிவித்திருக்க வேண்டாமோ!

சீனா (தனக்குச் சாதகமான சூழல் என்று உணர்ந்து), நீரை சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது (testing the waters!). எதிர்காலத்தில் ஒரு சிறிய அளவுக்கான போருக்கான ஓர் ஆயத்தமாக இது இருக்கலாம். இந்த விஷயத்தில் பிஜேபி காங்கிரஸை விட எந்த விதத்திலும் பெட்டர் என்று கூற முடியவில்லை. அவர்கள் ஆட்சியில் இருந்திருந்தாலும், எதையும் கழட்டியிருக்க மாட்டார்கள் என்பது தான் யதார்த்தம்.

5. 20 ஆண்டுகள், பாகிஸ்தானிய இருட்டுச் சிறையில் உழன்று, அநியாயமாக, வஞ்சகமாக சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட சரப்ஜித் சிங்கை இப்போது மாவீரனாக, தேசிய நாயகனாக கொண்டாடுவதால் என்ன பயன்? அவரைப் போல பல நாடுகளில் பல இந்தியக் கைதிகள் பல வருடங்களாக உழன்று கொண்டிருக்கின்றனர். தமிழ் மீனவர்கள் சிங்களக் கப்பல் படையால் தாக்கப்படுவது ஒரு வழக்கமாகவே ஆகி விட்டது. எந்த இந்திய அரசுக்கும் தம் மக்கள் எங்கிருந்தாலும் காக்கப்பட வேண்டியவர்கள் என்ற பொறுப்பும் கிடையாது, உணர்வும் கிடையாது. இவை இருந்தால் மட்டுமே, சரியான துரித நடவடிக்கை என்பது சாத்தியம்.

6. சீக்கியர்களுக்கு எதிரான 1984 தில்லி வன்முறை சம்பந்தப்பட்ட ஒரு வழக்கிலிருந்து முக்கியக் குற்றவாளியான, மாஜி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமாரை, சாட்சியங்கள் வலுவாக இல்லாத நிலையில், கோர்ட் விடுவித்திருப்பது, சீக்கியர்களிடையே பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஜ்ஜன், ஜக்திஷ் டைட்லர், லலித் மகேன் (இவர் காலிஸ்தான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு இறந்தார்) ஆகிய மூவருக்கும் சீக்கியப் படுகொலையில் சம்பந்தமில்லை என்றால், எதால் சிரிப்பது (அ) அழுவது என்று புரியவில்லை! சீக்கியப் படுகொலை பற்றி அறிய:
https://en.wikipedia.org/wiki/1984_anti-Sikh_riots

மோடி அப்பழுக்கற்றவர் என்றெல்லாம் கூறவில்லை. குஜராத் படுகொலையை முன் வைத்து காங்கிரஸ் கட்சி மோடியை வசை பாடுவது, அபத்த முரணாகத் தோன்றுகிறது.

7. பாமக தலைவர் ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து வெடித்துள்ள வன்முறை, பொது அமைதிக்கு பங்கம் மற்றும் பெருமளவில் பொதுச்சொத்து நாசம் குறித்து, இது எதிர்பார்த்த ஒன்று என்பது தவிர கூற எதுவுமில்லை.
History has the bad habit of repeating itself.

Sunday, February 17, 2013

இந்த வாரம்—விஸ்வரூபம், ஹெலிகாப்டர் ஊழல் மற்றும் கீதிகா - ச.சங்கர்

இந்த வாரம்—விஸ்வரூபம், ஹெலிகாப்டர் ஊழல் மற்றும் கீதிகா

எனது நீண்ட நாள் நண்பர் சங்கர் எழுதியதை மீள் பிரசுரிக்கிறேன்.

விஸ்வரூபம் படம் பார்த்தேன் .படம் டெக்னிகலாக நன்றாக எடுக்கப் பட்டிருந்தாலும் அதைத் தவிர யோசித்துச் சிலாகிக்கும் படியோ , திரும்பப் பார்க்கத் தூண்டும் படியோ பெரிதாக ஒன்றும் இல்லை.நிறைய காட்சிகளை மானாவாரியாக எடுத்துத் தள்ளி விட்டு பின் அதிலிருந்து சிலவற்றை எடுத்து ஒட்ட வைத்து படம் பண்ணியது போலவும் , ” இரண்டாம் பகுதியில் ஒரு வேளை விளக்கம் சொல்லுவார் போல” என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு படத்தில் லாஜிகல் சந்தேகங்களும் இருக்கிறது. இந்தப் படத்துக்கு முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியதெல்லாம் அபத்தம். முஸ்லிம் பெயரில் எழுதும் தமிழ் பதிவர்கள் நிறைய பேர் அந்த அபத்தத்தை வரிந்து கட்டிக் கொண்டு சப்போர்ட் பண்ணி எழுதுவது அதைவிட அபத்தமாக உள்ளது.முதல்வர் ஜெயலலிதா வருமுன் காப்போன் திட்டம் போல “சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விடாமல் போவதைப் பாதுகாக்கவே இந்தப் படத்தை தடை செய்தேன் “ என்று கூறியது காமடியின் உச்சகட்டம் மட்டுமல்லாது முஸ்லீம்களை சகிப்புத் தன்மை இல்லாத வில்லன்கள் போல சித்தரிக்கும் மாயைக்கு வழி வகுத்து மேலும் இமேஜ் டேமேஜ் செய்து விட்டது என்றே நான் கருதுகிறேன். இத்தனை பரபரப்பிற்கும் பின்னாலும் கூட இந்தப் படம் கமலின் மற்ற இண்டெலக்சுவல் ??? படங்கள் போலவே பெரு நகரங்கள் தவிர மற்ற இடங்களில் ” ஓட்ட “ வேண்டியிருக்கும்” என்பது என் கணிப்பு.


போனவாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இன்னொரு விவகாரம் “ ஹெலிகாப்டர் ஊழல் “ .டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நான்தான் இதை முதன் முதலில் கண்டு பிடித்தேன் என தம்பட்டம் அடித்துக் கொண்டு தினம் தினம் சில ஆவணங்களையும் வெளியிட்டுக் கொண்டு மத்திய அரசாங்கத்தை குதறிக் கொண்டு இருக்கிறார்கள்.மந்திரிகள் எம்பிக்கள் உட்பட காங்கிரஸ்காரர்கள் தினம் தினம் வந்து , வழ வழ , கொழ கொழ என பேட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.இருவருமே இப்படி அடித்துக் கொள்ளத் தேவையில்லை.இந்த அரசாங்க ஊழல் மலிந்த அரசாங்கம் என்றும் ஊழலை திருத்தவோ சரி செய்யவோ எதுவும் செய்யாது என்பதனை அவர்களுடன் சேர்த்து மக்களும் நன்கு அறிவார்கள்.இதில் புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது ? இதில்(ஹிலிகாப்டர் விவகாரத்தில்) என்ன ஊழல் நடந்தது யார் யார் பெயர் அடிபடுகிறது என்றெல்லாம் எழுதப் போவதில்லை.டைம்ஸ் நவ் தொலைக்காட்சி இரண்டு நாள் பாருங்கள்..எந்த எபிசோடிலிருந்து பர்த்தாலும் உடனே புரியும் மெகா சீரியல் போல தெள்ளத் தெளிவாகப் புரிந்து விடும்.ஆனால் மெகா சீரியல் போலவே முடிவுதான் இல்லை.


போன வாரம் வந்த இன்னொரு செய்தி சில மாதங்களுக்கு முன் ஹரியானா மானில முன்னாள் மந்திரி கோபால் காண்டா என்பவரது தொடர் மிரட்டலால் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப் படும் கீதிகா என்ற பெண்ணின்( இவர் அந்த மந்திரியால் நடத்தப் பட்டு வந்த விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் ) தாயாரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டதுதான். காரணமாக சொல்லப் படுவது அதே முன்னாள் மந்திரி , கீதிகா கேசை வாபஸ் வாங்கச் சொல்லி விடுத்த மிரட்டலால் ஏற்பட்ட மன உளைச்சல்தானாம். அதிகார மற்றும் பணபலமுள்ளவர்களுக்கு முன் கோர்ட் கேஸெல்லாம் ஒன்றும் பண்ணி விட முடியாது என்பதற்கு இந்தக் கேஸும் நல்ல உதாரணம்.கேஸை இழுத்தடித்தே ஒரு வழி பண்ணி விடுவார்கள்.சாமானியர்களின் கேஸ் பொது மக்கள் அல்லது மீடியாவின் பார்வையில் இருந்தால் மட்டுமே ஏதாவது உருப்படியாக நடக்க வாய்ப்புள்ளது டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு போல.இல்லாவிட்டால் அதோ கதிதான்.இந்த கேஸ் பற்றி தொலைக்காட்சியில் ஒலிபரப்பான விவாதத்தில் முன்னாள் போலிஸ் அதிகாரி கிரண் பேடி சொன்னது கவனத்தில் கொள்ளத்தக்கது.நமது குற்றவியல் சட்டங்கள் அனைத்தும் குற்றம் சுமத்தப்பட்டவரது /இழைத்தவரது உரிமை, பாதுகாப்பு பற்றியே பேசுகிறது,குற்றம் இழைக்கப் பட்டவரது அவர் சார்ந்தவரது உரிமை,பாதுகாப்பெல்லாம் பேசப்படுவது குறைவு. அவர் அரசு தரப்பாகி விட்ட படியால் போலிஸ் மற்றும் அரசு வழக்கறிஞர் தயவில் நீதியை எதிர்பார்க்கும் நிலையில்தான் இருக்கிறார்கள்,அரசு இயந்திரம் எப்படி செயல்படும் என்பது அனைவரும் அறிந்த்தே.இதனால் குற்றம் இழைக்கப்பட்டவர் ஏழையென்றால் அவர் நிலை பரிதாபத்துக்குறியதாகி விடுகிறது.இதனால்தான் பாதிக்கும் மேல் பாதிக்கப் பட்டவர்கள் நீதியே வேண்டாம் என்று ஓடிவிடுகிறார்கள்.சாட்சி பாதுகாப்பு போன்ற உடனடி சட்டத் திருத்தங்கள் ஏற்பட்டால்தான் இந்த நிலை மாறும்.அது வரை ஏழைகளுக்கு நடக்கும் அநீதிகளுக்கு இரக்கப் பட்டு ஐயோ பாவம் என்று சொல்லி விட்டு விட்டு விடாமல் ’ அவ்வப்போது( சென்சேசனலாக இருக்கும் போது மட்டும்) குரல் கொடுக்காமல், நீதி கிடைக்கும் வரை அதை தொடர்ந்து ஃபோகஸில் வைக்க குரல் கொடுப்பது நம் அனைவரது கடமையாகிறது.


அன்புடன்...ச.சங்கர்

Saturday, February 09, 2013

டோண்டு மரணம் - தினகரன் தலையங்கம்

டோண்டு மரணம் - தினகரன் தலையங்கம்

பிப் 7ஆம் தேதியன்று தினகரன் நாளிதழில் டோண்டு ராகவன் சார் பற்றிய தலையங்கம் வந்துள்ளது.

இரண்டு விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

1. எனது இந்த அஞ்சலி இடுகையில் டோண்டு சாரின் நண்பர்கள் / வாசகர்கள் தங்கள் இரங்கல்களை பதிவு செய்துள்ளனர் என்பதைத் தவிர்த்து, நான் அறிந்த வரையில் சுமார் 25 தமிழ் வலைப்பதிவர்கள் டோண்டு சாருக்கு அஞ்சலி இடுகைகளை சமர்ப்பித்துள்ளது, அன்னார் தனது எழுத்துகள், நேர்மை மற்றும் நட்பு பாராட்டும் இயல்பு வாயிலாக எத்தனை பதிவர்கள் / வாசகர்கள் மனதில் நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது!  அந்த அஞ்சலி இடுகைகளின் தொடுப்புகளை எனது இடுகையின் இறுதியில் அளித்துள்ளேன்.

2. இன்று பொழுது போகாமல், டோண்டு சாரின் வலைப்பதிவில், எனது பெயரை கூகிளியதில்,  60-க்கும் மேற்பட்ட இடுகைகளில் ஏதோ ஒரு விஷயத்துக்காக என்னை அவர் சுட்டியிருப்பதை  இப்போது தான் முதன் முதலாக கவனிக்கிறேன்.  சிலவற்றை வாசிக்கையில் அவர் என் மேல் வைத்திருந்த அபிமானம் / நட்பு பிரமிக்க வைப்பதாக இருக்கிறது !  His death is a great personal loss to me!

எ.அ.பாலா

Wednesday, February 06, 2013

டோண்டு ராகவன் சார்

டோண்டு ராகவன் சார்

திரு.டோண்டு ராகவன் இயற்கை எய்தி விட்டது குறித்து என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். அப்போதைய மனநிலையில் விரிவாக எழுதவில்லை. இன்று காலையில் அவரது மரணச்செய்தி கிடைத்தபோது, 4 ஆண்டுகளுக்கு முன் எனது அக்கா மகன் அகாலமாக ஒரு விபத்தில் மரணித்தபோது ஏற்பட்ட அதே வலியை / தாக்கத்தை உணர்ந்தேன். அதற்கு அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் ஒரு காரணம்.

திருவல்லிக்கேணியும், இந்து உயர்நிலைப்பள்ளியும் தான் எங்கள் 8+ ஆண்டுகளுக்கான நட்புக்கு அச்சாரமிட்ட விஷயங்கள். 2004-ல் என் இடுகை ஒன்றை வாசித்து விட்டு என்னை தொடர்பு கொண்டு வலைப்பூ தொடங்குவது மற்றும் தமிழ் தட்டச்சு பற்றி கேட்டறிந்து கொண்டு அன்று எழுத ஆரம்பித்தவர், இறப்பதற்கு 2 நாட்கள் முன் வரை ஓயாமல் (சுமார் 1000 இடுகைகள் இருக்கலாம்) எழுதி வந்திருக்கிறார். அவர் தொடாத சப்ஜெக்ட்டே இல்லை என்று தோன்றுகிறது. அது போல, கடைசி வரை ஏதாவது வாசித்துக் கொண்டே தான் இருந்தார்!

வாசிப்பனுபவம் அவரது மிகப்பெரிய பலம்! அதனால் அவரது தகவல்களில் தவறு காண்பது அரிது. அரசு நிறுவனத்தில் பொறியாளர் பதவியை உதறி விட்டு, தனக்குப் பிடித்தமான (பிரெஞ்சு, ஜெர்மன்) மொழிபெயர்ப்புத் தொழிலை இறுதி வரை மேற்கொண்டிருந்தவர். அவர் நேற்று தொடங்கிய மொழிபெயர்ப்பு பணி ஒன்று அவரது மடிக்கணினியில் அவருக்காக காத்து கொண்டிருக்கிறது! கடுமையான உழைப்பாளி அவர்.

போலி டோண்டு விவகாரத்தின்போது (அதில் அவர் நேரவிரயம் செய்திருப்பினும்) அவரது மன உறுதி பளிச்சிட்டதை பலரும் ஒப்புக் கொள்வர். தனது கருத்துகளின் மேலிருந்த பிடிப்பால், பலமுறை வலைப்பூ விவாதங்களில் அவர் ஈடுபட்டிருந்தாலும், தனிப்பட்ட அளவில் பலருடனும் இனிமையாக நட்பாகப் பழகியவர் என்பதை நான் அறிவேன். போலித்தனம் துளியும் இல்லாதவர். அவருடன் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில், யாரையும் அவர் நிந்தித்துப் பேசி நான் கேட்டதில்லை. அவரவர் கருத்து அவரவருக்கு என்று போய்க்கொண்டே இருந்தவர்.

அவரது மரணத்திற்கு பாலபாரதி, நைஜீரியா ராகவன், லக்கிலுக், உண்மைத்தமிழன், ரஜினி ராம்கி ஆகியோர் வந்திருந்தனர். பாலா ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர் டோண்டு சார், அதுவே அவரது தனித்துவமான சிறந்த பண்பு’ என்றார். உ.தமிழன் டோண்டுவைப் போல் எழுத இனி ஆள் கிடையாது என்றும், அவரது மரணம் தமிழ் வலையுலகுக்கு பெரும் இழப்பு என்றும் வருந்தினார். ர.ராம்கி, போலி டோண்டு விவகாரத்தில் தான் சிக்கியிருந்தால், தமிழ் இணையத்தை விட்டே ஓடியிருக்கக்கூடும் என்று டோண்டுவின் மனத்திண்மையை வலியுறுத்திப் பேசினார்.

புற்று நோய்க்கு எதிரான தனிப்பட்ட போராட்டத்திலும் அவரது அந்த மனத்திண்மையை பார்க்க முடிந்தது. தனக்கு கேன்ஸர் என்பதையே நோய் வந்து ஒரு 3 மாதங்களுக்குப் பின் தான் (சொல்லாவிட்டால் பின்னால் நான் கோபப்படுவேன் என்பதற்காக) தயங்கித் தயங்கி என்னிடம் தெரிவித்தார். எனக்கு தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதனை அறிமுகம் செய்து வைத்தவரும் அவரே! அதுவே, என் நவதிருப்பதி விஜயத்துக்குக் காரணமாக அமைந்தது. ஆன்மீகம் பற்றி டோண்டு அவர்கள் அதிகம் எழுதியிராவிட்டாலும், பெருமாள் மேல் ஆழ்ந்த பக்தியும், நம்பிக்கையும் கொண்டவர். என் திருப்பாவை இடுகைகளின் ரசிகர் அவர், பலமுறை மனதார பாராட்டியும் இருக்கிறார்.

“உங்கள் தாயார் ரொம்ப கஷ்டப்பட்டு உங்களை ஆளாக்கியிருக்கிறார். அவரை கடைசி வரை நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று என் வீட்டுக்கு வரும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். என் மகள்களை (அவருக்கு வாய்க்காத) பேத்திகளாக பாவித்து அன்பு செலுத்தியிருக்கிறார். என் தந்தையும், என் மனைவியின் தந்தையும் என் மகள்கள் பிறப்பதற்கு முன்னமே இறந்து போனதால், என் மகள்களுக்கு அறிமுகமான முதல் தாத்தா (இந்த அடைமொழி அவருக்குப் பிடிக்காதிருந்தபோதிலும்) டோண்டு ராகவன் சார் தான்!

டோண்டுவிடம் சிலபல குறைகள் இருந்திருக்கலாம். ஆனால் அவரது பிரத்யேக குணங்களான, கடும் உழைப்பு, நிறைந்த வாசிப்பனுபவம், போலித்தனமின்றி நட்பு பாராட்டும் / உதவும் குணம், மன உறுதி, சிறந்த அறிவாற்றல், அசாத்திய மொழித்திறமை ஆகியவற்றை 8 ஆண்டுகளூக்கும் மேலாகஅருகிலிருந்து கவனித்தவன் என்ற வகையில், அவர் ஒரு மாமனிதர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

ஒரு 7 மாதங்களுக்கு முன் டோண்டு குடும்பத்துடன் மகர நெடுங்குழைக்காதனை தரிசிக்க சென்றபோது, உடல் நிலை சற்றே சரியில்லாத காரணத்தால், அவரை மதுரையிலேயே விட்டு விட்டு அவரது குடும்பத்தினர் மட்டுமே தென் திருப்பேரை சென்று பெருமாளை தரிசித்ததாக அவரது துணைவியார் என்னிடம் கூறினார். டோண்டு சாரின் அந்த மனக்குறையை மகரநெடுங்குழைக்காதனே நிவர்த்தி செய்தது தான் விசேஷமான விஷயம். 2 மாதங்களுக்கு முன் டோண்டுவை தன்னிடம் வரவழைத்து அவருக்கு திவ்யமான தரிசனத்தை வழங்கியிருக்கிறார். மகரநெடுங்குழைக்காதன் மீது அவருக்கு இருந்த பரமபக்தி அத்தகையது! 

எந்தரோ மகானுபாவுலு, அந்தரி கி வந்தனமுலு --
டோண்டு ராகவன் சாரின் ஆன்மா சாந்தியடைய நான் வணங்கும் பரமபத நாயகனை வேண்டிக் கொள்கிறேன்!

எ.அ.பாலா

பிரபல வலைப்பதிவாளர் டோண்டு ராகவன் மரணம்

பிரபல வலைப்பதிவாளர், அருமை நண்பர் டோண்டு ராகவன் அவர்கள் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக காலமாகி விட்டார் என்ற செய்தி வந்தபோது மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. என்னளவில் இது மிகப் பெரிய இழப்பு! இன்று காலை 11 மணி அளவில் தகனம். 2004-ல் என் வலைப்பதிவை பார்த்து விட்டு, தானும் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றவன் என்று சொல்லி என்னுடன் அறிமுகமானார். அப்போது அவர் எனக்கு எழுதிய முதல் மடல் இது !

Triplicane memories and greetings from Dondu 

From narasimhan raghavan

To balaji_ammu@yahoo.com

Dear Balaji,
Yesterday I came to Triplicane. Had a leisurely walk down Pycrofts Road browsing the books in the platform shops. As I passed the Neeli Veerasami Chetty Street cutting, I thought of you but could not make it to your place as I do not know your address. It is also possible that you might have been still at office (5PM). If you have no objection, do email me your residential phone number and address. I will come to your place next time I come that side, if I may.

Do drop in at my place in Nanganallur. (20/B-23, 15th Cross Street, Hindu Colony, Opposite the new Nanganallur bus terminus). You have my telephone numbers already. Your blog about Vegundu was quite good.

Regards, N.Raghavan

என்னிடம் மிகுந்த அன்பாகப் பழகியிருக்கிறார். நிறைந்த வாசிப்பனுபவம் மிக்கவர். அசாத்தியமான மன உறுதி கொண்டவர். சுறுசுறுப்பின் இன்னொரு பெயர் டோண்டு என்று கூட சொல்லலாம். தமிழ் வலையுலகில் அவரது பிரபலத்தைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை!  இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன் கூட தன் வலைப்பதிவில் ஒரு இடுகையை பதிந்திருக்கிறார்!  8+ ஆண்டுகளில் சுமார்  1000 இடுகைகள் பதிந்திருப்பார் என்பது என் அனுமானம்.

புற்று நோயை எதிர்த்துப் போராடி அதில் வெற்றியும் பெற்றவர். அந்த கடினமான கால கட்டத்தில் கூட இயல்பாக இருக்கவே செய்தார் என்று நான் அறிவேன். இறுதி வரை கடுமையாக உழைத்திருக்கிறார். பல முறை என் வீட்டுக்கு வந்திருக்கிறார். என் குழந்தைகள் அவரது ரசிகைகள்! சமீபத்தில் (அவருக்குப் பிடித்தமானவார்த்தை இது!) மிகுந்த நோய்வாய்ப்பட்டிருந்த என் அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வந்தபோது, என் அம்மா அவரை யாரென்று கண்டு கொண்டபோது, சந்தோஷம் அவருக்கு.

அந்த ஒரு முறை தான், நடப்பது கூட பிரயத்தனமாக இருப்பதாகக் கூறினார். அயற்சி என்றே கூறாதவர் அப்படி சொன்னபோது, மனது சங்கடப்பட்டது. எனது வலைப்பதிவு மூலம் செய்து வந்த சமூக உதவிகளுக்கு பெரிய ஊக்கமாக இருந்தவர். டோண்டு போல் ஒரு மனிதரை நான் பார்த்ததும் இல்லை, இனிமேல் பார்க்கப் போவதுமில்லை. அவரது ஆத்மா சாந்தியடைய அவருக்கு மிகவும் பிடித்த தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதனை வேண்டிக் கொள்கிறேன்!

எ.அ.பாலா

தொடர்புடைய அஞ்சலி இடுகைகள்:



டோண்டுவின் மரணம்- தினகரன் தலையங்கம்

அஞ்சலி – டோண்டு ராகவன் - திருமலை ராஜன்

டோண்டு ராகவன் - அஞ்சலி..!  - உ.தமிழனின் சிறந்த அஞ்சலி

பந்திகொள்ளும் டோண்டூ இராகவன் அவர்கள்! -ப.வி.ஸ்ரீரங்கன்

டோண்டு சாரின் ஜெயா டிவி நேர்முகம் - சின்னக்குட்டி

பாண்டுச் சோழன் சரித்திரம் - பினாத்தல் சுரேஷ்

'சமீபத்தில்' நண்பர் டோண்டு இராகவன் இழப்பு !- கோவி கண்ணன்

திரு.டோண்டு ராகவன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள். -
சாதி இனிஷியல் மாதிரி - யுவகிருஷ்ணா
டோண்டு ராகவன் - பத்ரி சேஷாத்ரி
நண்பர் 'டோண்டு' ராகவன் - மதிபாலா

டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை! - சுவனபிரியன்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

Dondu Raghavan Sir, We miss you!! - பழமை பேசி

அமரர் டோண்டு ராகவன்..

டோண்டு சார் - கானா பிரபா

டோண்டு ராகவன்.- கேபிள் சங்கர்

சென்று வாருங்கள் டோண்டு - செல்வன்

பதிவர் திரு டோண்டு ராகவன்!

மூத்த பதிவர் டோண்டு ராகவன் மறைவின் நினைவாக

  டோண்டு ராகவன் - சந்திரவதனா

டோண்டு ராகவன் இறைவனடி சேர்ந்தார்-அருண்

பதிவர் டோண்டு மரணம் - பலூன் மாமா

டோண்டு ராகவன் சார்! - உலகநாதன்
டோண்டு - துளசி தளம்

டோண்டு சார்- இன்னும் வாழ்ந்திருக்கலாம் - உஷா

டோண்டு ராகவன் சார் – அஞ்சலி-பால அனுமான்
டோண்டு ராகவன் மறைவு-பெருங்குளம் ராமகிருஷ்ணன்
டோண்டு! - சரவணகுமார்
டோண்டு ஐயாவுடனான என் நேரங்கள் - அருண் பிரபு
டோண்டு ராகவன் – அஞ்சலி - மலர்மன்னன்

 

 

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails